கேரள மாநிலத்தில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை கொள்ளையடித்து வந்த கொள்ளையர்களை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின்போது என்கவுன்ட்டரில் ஒரு கொள்ளையன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கன்டெய்னர் லாரி எங்கும் நிற்காமல் சென்றதால், காவல்துறையினர் சேஸிங் செய்து மடக்கிப் பிடித்தனர். அப்போது, கன்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் 7 கொள்ளையர்கள், ஒரு சொகுசு கார், கட்டுக்கட்டான பணத்துடன் (ரூ 66 லட்சம் என சொல்லப்படுகிறது) பதுங்கியிருந்தனர். போலீசாரை கண்டதும், அவர்களை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்ப முயன்றனர்.
அப்போது, ஒருவரை மட்டும் போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். மற்ற 6 பேரில் ஒருவர் தப்பியோடிய நிலையில், 5 பேர் கைதாகி உள்ளனர். ஐவரில் ஒருவர் காலில் துப்பாக்கிக் குண்டுப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பிடிபட்ட கண்டெய்னர் லாரி ராஜஸ்தான் பதிவெண் கொண்டது.
பிடிப்பட்ட கொள்ளையர்கள், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வடமாநில கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் 7 மாநில காவல்துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சேலம் சரக டிஐஜி உமா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “கொள்ளையர்கள் அனைவரும் திருச்சூரில் காரில் சென்றுதான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் லாரியில் வந்துள்ளனர். அந்த லாரி வழக்கமாக செல்லும் லாரிதான். திருச்சூர் கொள்ளைக்குப்பின் மேற்கு மண்டலம் அலெர்ட் செய்யப்பட்டது. அதன்பேரில் இவர்களை சந்தேகத்தில் பிடிக்க முயன்றனர்.
கொள்ளையர்கள் கற்களை வீசி போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தப்பிச் செல்ல முயன்ற ஜூமான் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். பணப்பையுடன் ஓடிய அஸ்ரூவை காலில் சுட்டுப்பிடித்தோம். இவர்கள் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்-களை குறிவைத்து, கூகுள் மேப் உதவியுடன் கொள்ளை அடித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தமிழ்நாட்டில் எந்த வழக்குகளும் இல்லை. கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளையில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது விசாரணைக்குப் பின் தெரியவரும்.” என தெரிவித்தார்.
Read More : புதிய ரேஷன் கார்டு அப்டேட்!. கூடுதல் சர்க்கரை வழங்க முடிவு!. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!.