புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சர்க்கரை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் ரேஷன் கடைகளில் கிடைக்கும் இலவச பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஒன்று. ரேஷன் கடைகளில் மட்டும் இன்றி அரசு வழங்கிடும் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பொது மக்களுக்கு இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படாமல் இருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக, புதிய ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் என்ற காரணத்தால் தமிழக அரசு கடந்த ஓராண்டுகளாக புதிய ரேஷன்கார்டு வழங்கப்படாமல் இருந்து வந்தது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும் ஸ்மார்ட் கார்டுகள் சரிபார்க்கும் பணி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது. அந்த வகையில் விண்ணப்பிக்கப்பட்ட 2,89,591 விண்ணப்பங்களில் இதுவரை 80,050 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு உள்ளது.
இவர்களுக்கு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் முழுவதும் கார்டுகள் விநியோகிக்கப்பட்ட நிலையில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்களுக்கு உணவு பொருட்கள் இன்னும் ஒதுக்கவில்லையெனவும் அக்டோபர் மாதம் முதல் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிதாக ரேஷன் கார்டுகள் பெற்றவர்கள் வருகிற அக்டோபர் மாதம் முதல் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
மேலும் புதிய குடும்ப அட்டை தாரர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கவதற்கான நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இந்தநிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் அட்டைகளுக்கு 2,89,591 பேர் விண்ணப்பித்து காத்துள்ள நிலையில், 1 லட்சத்து 22 ஆயிரம் பேருக்குபுதிய ரேஷன் அட்டைகள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது முதல் கட்டமாக 80 ஆயிரத்து 50 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 99 ஆயிரத்து 300 பேரின் விண்ணப்பங்கள் சரியாக இல்லாத காரணத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 68 ஆயிரத்து 291 பேரின் விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னையில் நடைபெற்ற இந்திய தேசிய உணவக சங்கத்தின் சார்பில் நடந்த இந்திய உணவகங்களின் உச்சிமாநாடு 2024-ல் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடங்கும் என கூறியிருக்கும் அவர், ரேஷன் கார்டுகளுக்கு கூடுதல் சர்க்கரை கொடுக்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார்.