நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கேரளா ஏ.டி.எம் கொள்ளையர்களை போலீசார் பிடித்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி பள்ளி குழந்தைகள் மீது மோதும் வகையில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், இரண்டு கார்கள், 4 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சினிமா பாணியில் கண்டெய்னரை பின் தொடர்ந்து சேஸிங் செய்தனர். பின்னர் சேலம் மாவட்டம் சன்னியாசிப்பட்டி அருகே சென்றபோது பயத்தில் கண்டெய்னரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து, கண்டெய்னரை சோதனை செய்தபோது, 7 வடமாநில இளைஞர்கள் துப்பாக்கியுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இந்த கண்டெய்னர் லாரி ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்டது என்றும் தெரியவந்தது. மேலும் அதில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஒரு சொகுசு கார், ஏடிஎம் மெஷின் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அதிரடி படையினருடன் சென்ற மாவட்ட கண்காணிப்பாளர் கண்டெய்னரை சுற்றிய வளைத்தனர். அப்போது, கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே இருந்த கொள்ளையர்கள், போலீசாரை நோக்கி ஆயுதங்களால் தாக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட, ஒருவர் காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த கொள்ளையனின் உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: எடப்பாடி அருகே 4 குழந்தைகளை விற்பனை செய்த விவகாரம்!. மேலும் 3 புரோக்கர்கள் கைது!.