எடப்பாடி அருகே பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்த வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, திம்பத்தியான் வளவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (32). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் குண்டுமல்லி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்ததையடுத்து, குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, குழந்தை இல்லாத தம்பதியான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவருக்கு புரோக்கர் மூலம் தலா 1 லட்சத்துக்கு குழந்தையை விற்க முயன்றுள்ளார். ஆனால், தடுத்தெடுக்கப்பட்ட குழந்தையை சட்டப்பூர்வமாக பதிவு செய்துகொள்ளும் வகையில் சேலம் குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு தகவல் அளித்துள்ளார் அந்த நபர்.
இதையடுத்து, சேட்டுவிடம் விசாரணை மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. திருமணம் ஆகி 7 ஆண்டுகளில் இருவருக்கும் தற்போது வரை 6 குழந்தைகள் பிறந்துள்ளது. ஏற்கனவே, பிறந்த 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையை தலா ரூ. 1 லட்சத்துக்கு புரோக்கர்கள் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்தது அம்பலமானது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தந்தை சேட்டு உட்பட புரோக்கர்களான செந்தில்முருகன், முனுசாமி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், குழந்தைகளை விற்பனை செய்ததாக தற்போது மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இடைத்தரர்களான பாலாமணி, தமிழ்செல்வன், லோகாம்பாள் என மொத்தம் இதுவரை ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேறு எங்கெல்லாம் குழந்தைகள் விற்பனை செய்து உள்ளனர் என்பது போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.