மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சேலம் உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு திடீரென கனமழை பெய்தது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. சென்னை ஆவடி, அம்பத்தூர், வானகரத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவானது. திருவாலங்காட்டில் 11 செ.மீ., மணலியில் 10 செ.மீ., கே.கே. நகர், அண்ணா நகர், கத்திவாக்கத்தில் 9 செ.மீ., கொளத்தூர், கோடம்பாக்கம், புழலில் 8 செ.மீ., செங்குன்றத்தில் 7.5 செ.மீ., ஊத்துக்கோட்டையில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் 2 விமானங்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கனமழையால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்ட நிலையில் 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன.
Readmore: இனித்த இன்ஸ்டா காதல்!. இளைஞருடன் ஓடிய 9ம் வகுப்பு மாணவி!. போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்!