மோசடி வழக்கில் 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று (செப்.,26) உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இவரது ஜாமீன் மனுவை விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதன்மூலம் 471நாட்கள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். ரூ.25 லட்சம் பிணைத்தொகை செலுத்தி செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளநிலையில், அவர் மீண்டும் அமைச்சராவார் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்று பரபரத்துக்கொண்டிருக்கும் வேளையில், அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மீண்டும் இடம் பிடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.