தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீடு 17,100 டன்னாக அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு ஏற்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. இது தவிர கிலோ ரூ.25 விலையில் 2 கிலோ சர்க்கரை, ரூ.30 விலையில் துவரம் பருப்பு, ரூ.25 விலையில் பாமாயில் ஆகியவை விற்கப்படுகின்றன. இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஏற்பட்டுள்ள திடீர் கோதுமை தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு கடந்த மாதம் தமிழகத்திற்கு வழங்கும் கோதுமை அளவை 1,038 டன்னாகக் குறைத்தது. இதனால் தான் ரேஷன் கடைகளில் அனைவருக்கும் கோதுமை கிடைக்காத நிலை உருவாகியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் ஒருபகுதியாக கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி தமிழக உணவுத்துறை சார்பில் டெல்லியில் மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதம் ரூ.8576.02 டன் கோதுமையே மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்குகிறது. எனவே, மாதம் 23 ஆயிரம் டன் கோதுமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, மாதம் 8,500 டன்னில் இருந்து, 17,100 டன்னாக அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது அடுத்த மாதம், 24ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவுள்ளநிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.