திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்திய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் இருந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது. இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை ஆந்திர மாநில அரசு அமைத்துள்ளது. தற்போது திருப்பதி வெங்கடாசலபதி கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க தேவையான நெய்யை கர்நாடக அரசு நிறுவனமான நந்தினி நிறுவனத்திடம் இருந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்து வருகிறது.
விலங்குகளின் கொழுப்பைக் கொண்டு லட்டு தயாரிக்கப்பட்டதாக ஆய்வில் தெரியவந்த நிலையில் திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் இடங்கள், லட்டு விற்கும் பகுதி உள்ளிட்ட கோவிலின் சில பகுதிகளில் சாந்தி ஹோமம் நடைபெற்றது. கோயில் மீண்டும் தூய்மையாகிவிட்டதாகக் கூறிய அர்ச்சகர்கள், பக்தர்களை தயக்கமின்றி கோயிலுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பதி லட்டு தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் அண்மையில் திருப்பதி கோவிலுக்குச் சென்று அங்கு வாங்கிய லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பத்மாவதி, தனது உறவினர்களுடன் அண்மையில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு லட்டு பிரசாதம் வாங்கிவிட்டு ஊருக்குத் திரும்பி உள்ளார். திருப்பதி கோவில் பிரசாதத்தை தனது உறவினர்களுக்கு விநியோகிக்க, அதனை பிட்டபோது, லட்டு ஒன்றில் குட்கா பாக்கெட் மற்றும் சிகரெட் துண்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, இதனை வீடியோவாக பதிவு செய்த அவர், அதனை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.