சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டானின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட டைடல் பூங்கா, அதன் பின்னர் தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு பொறியியல் கல்லூரிக்கு அருகில் ‘மினி டைடல்’ பூங்கா அமைக்க 15 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், மூன்று தளங்கள் கொண்ட பிரம்மாண்ட கட்டட கட்டுமானப் பணியினை ரூ. 29.5 கோடி மதிப்பில் மேற்கொள்ள முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டினாா்.
இதனையடுத்து டெண்டா் விடப்பட்டு பணிகள் தொடங்கின. பணிகள் தொடங்கிய 8 மாதத்தில் சேலம் ‘மினி டைடல்’ பூங்கா மிக பிரம்மாண்டமாக கண்ணைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டது. இதற்கான இறுதிக்கட்ட கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளன. இந்தநிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த ‘மினி டைடல்’ பூங்கா பயன்பாட்டுக்கு வரும் போது நேரடியாக 500 போ் வரைக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள் என பல்வேறு தரப்பினரும் ‘மினி டைடல்’ பூங்காவில் தங்களது நிறுவனங்களைத் தொடங்க வசதியாக கட்டடம் முழுமையாக குளிா்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமரா, தீத்தடுப்புக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பணியாளா்களின் காா், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் ‘மினி டைடல்’ பூங்கா சேலத்தில் அமைவதால், பெருநிறுவனங்கள் தங்கள் கிளைகளை சேலத்தில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில்ரூ.30.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் திறந்துவைத்தார்.
Readmore: அதிகரிக்கும் செல்போன் பயன்பாடு!. மூளை புற்றுநோயை ஏற்படுத்துகிறதா?. WHO ஆய்வு என்ன கூறுகிறது?