20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்து ஒரு சைக்கிள் ஆவது இருக்கும். காலப்போக்கில் இரண்டு சக்கர மேட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்ல வீட்டுக்கு இரண்டு மேட்டார் வாகனங்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக மனிதர்கள் உடற்பயிற்சி செய்வது குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், சர்க்கரை நோய்களின் பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால், சைக்கிள் ஓட்டும் பழக்கத்தால் மனிதர்களின் உடல் நலனிலும், நாட்டின் சுற்றுச்சூழல் நலனிலும் பல நன்மைகள் ஏற்படுகிறது
இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாப்படுகிறது. உடல் நலம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஏற்ற போக்குவரத்து முறை சைக்கிள் என்பதால் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க ஆண்டுதோறும் சைக்கிள் தினம் கொண்டாடப்படும் என்று 2018-ம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், சமீபத்தில், பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மை குறித்த இந்த ஆய்வு BMJ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, 16-74 வரையிலான வயதுடைய 82,000 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கிட்டதட்ட 18 ஆண்டுகள் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, தேர்ந்தெடுத்த தனிப்பட்ட நபர்களிடம் போக்குவரத்துக்காக பயன்படுத்திய வாகனம் என்ன என்பது குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. மேலும், தனிப்பட்ட நபரின் மருந்துசீட்டு, மருத்துவ அறிக்கைகள், இறப்பு குறித்த தகவல்கள் என அனைத்து தகவலையும் ஆய்வாளர்கள் பெற்றுள்ளனர். ,“சைக்கிள் பயன்படுத்துபவருக்கு மற்றவர்களை காட்டிலும் முன்கூட்டிய மரண அபாயம் 47% குறைகிறது. வேலைக்கு செல்வது போன்ற காரணங்களால் சைக்கிள் ஓட்டி செல்பவர்களுக்கு, புற்றுநோயால் உயிரிழப்பு 51%, இருதய கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 24%, மனநல கோளாறு ஏற்படுவது 20% குறைவாக உள்ளது “ என்று தெரிவித்துள்ளது.