சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தங்காயூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவர், சங்ககிரி டிவிஎஸ் மேம்பாலம் அருகே மீன்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், மீன்கடைக்கு குடிபோதையில் வந்த நபர், அங்கு மது குடிக்க அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ராஜ்குமார், இங்கெல்லாம் மது குடிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, குடிபோதையில் இருந்த நபர், மீன்கடை முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை மறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜ்குமாருக்கும் அந்த போதை நபருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர், கத்தியை எடுத்து ராஜ்குமாரை குத்தியுள்ளார்.
பின்னர், அந்த நபர் தப்பியோடிய நிலையில், வலி தாங்க முடியாமல் ராஜ்குமார் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை உடனே மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.