சென்னையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான ‘FICCI’ சார்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று “மகளிர் எழுச்சி” என்னும் தலைப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், கல்வி, பொருளாதாரம், உட்கட்டமைப்புகள், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும், இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சி, உலக நாடுகளை பிரமிக்க வைத்துள்ளது. பெண்கள் முன்னேற்றம் அடையாமல், அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்காமல், நாட்டின் வளர்ச்சி முழுமை பெறாது.

அதை உணர்ந்து, பிரதமராக மோடி பதவியேற்றது முதல், பெண்கள் நலனை மையப்படுத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் வீட்டு வேலைகளிலேயே முடங்கி விடக்கூடாது என்பதற்காகவே, 12 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு, 10 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு, 17 கோடி பெண்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, காவல் நிலையங்களில் மூன்று பெண் எஸ்.ஐக்கள், 10 பெண் காவலர்கள் இருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.” எனப் பேசினார்.

கருத்தரங்கில் கேள்விகளுக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது பதில் அளித்த அவர், “காய்கறி கடைகளுக்கு நானே செல்வது, எனது தினசரி வேலைகளை நான் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அது தற்போது சாத்தியமில்லை. ஒருமுறை நான் சென்னையில் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கினேன். அதை நடிப்பு என்று விமர்சனம் செய்தார்கள். நான் வாங்கிய காய்கறிகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூட சொன்னார்கள். இது போன்ற விமர்சனங்களை என்னால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை.

நிறைய பேர் என்னை தலைக்கனம் பிடித்தவர் போன்று பேசுகிறேன் என்று விமர்சனம் செய்கின்றனர். அரசியலில் இருக்கும் ஒரு பெண், பிறந்த வீடு, புகுந்த வீட்டை எல்லாம் விட்டுவிட்டு எங்கோ டெல்லியில் சென்று தனியாக இருக்கும் ஒரு பெண் தன்னை தற்காத்துக் கொள்ள இதை எல்லாம் செய்ய வேண்டியது இருக்கும் ” என்று தெரிவித்தார்.

Readmore: பெற்றோர்களே உஷார்!. மூளையை பாதிக்கும் Digital Dementia!. எவ்வாறு பாதிக்கிறது?. தடுப்பது எப்படி?