நடப்பாண்டின் மிலாது நபி செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்: ஹிஜ்ரி 1446 சஃபர் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 04-09-2024 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மிலாதுன் நபி செவ்வாய்க்கிழமை 17ம் தேதி கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.ஏற்கனவே திங்கட் கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செவ்வாய் கிழமைக்கு விடுமுறை மாற்றப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி. முகம்மது நபிகள் அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மக்களிடம் அவருடைய எளிமையான போதனைகள் மூலம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுசேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர். இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளை நினைவு கூறும் நாளாக மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் பிறப்பும், இறப்பும் ஒரே நாள் என்பது குறிப்பிடத்தக்கது. முகம்மது நபி, கிபி 570ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாது நபியாக இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த நாளில் முகம்மது நபியின் போதனைகளை போற்றும் விதமாக இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை வாசிப்பது மிக முக்கிய கடமையாக வைத்துள்ளனர். பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவாக இஸ்லாமிய பண்டிகைகள் அனைத்தும் பிறை தெரிவதன் அடிப்படையிலேயே கொண்டாடப்படுவது வழக்கம்.

Readmore: உஷார்!. ஓடும் பேருந்தில் கைவரிசை!. மயக்கம் வருவதுபோல் அப்பாவியாக நடித்த பெண்!. கையும் களவுமாக பிடித்த மக்கள்!