திருச்சியில், பிறந்து 7 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை இதயத்தில் ஏற்பட்ட வால்வு பிரச்னையால் உயிருக்குப் போராடியிருக்கிறது. குழந்தையைக் காப்பாற்ற தீவிர சிக்சைகள் மேற்கொண்ட மருத்துவர்களுக்கு, இன்று காலை அந்தக் குழந்தையை உடனே இதய அறுவை சிகிச்சைக்காக கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசர நிலை ஏற்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கிட்டத்தட்ட 220 கிலோ மீட்டர் தூரம். சாதாரணமாக ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோமீட்டர் வேகம் என்று வைத்துக் கொண்டாலும் சென்றடைவதற்கு 3 1/2 மணி நேரத்திற்கு மேலாகும். அதுவும் திருச்சி – கோவை இடையிலான கரூர் வழியாக செல்லும் சாலை முழுக்க முழுக்க நான்குவழி விரைவுச் சாலை இல்லை. ஆங்காங்கே ஊர்கள், இரண்டுவழிச் சாலை என குறுக்கும் மறுக்கும் வாகனங்கள் செல்லும் சாலை. அப்படிப்பட்ட சாலையில் சென்றால் இன்னும்கூட கால தாமதமாகலாம்.
இப்படிப்பட்ட சவாலான விஷயத்தைச் செய்து முடிக்க தயக்கமின்றி மருத்துவர் குழு தயாரானது. இன்று காலை முதலே இதற்கான ஏற்படுகள் திருச்சி அரசு மருத்துவமனையில் தயாராக, அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுவதில் கைதேர்ந்த அஸ்வின் என்பவர் இந்தச் சவாலை ஏற்று பாரா மருத்துவ குழுவுடன் திருச்சியிலிருந்து கோவைக்கு காலை 10 மணியளவில் கரூர் வழியாக விரைந்திருக்கிறார். கோவைக்குச் செல்லும் வழியில் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை முன் ஏற்பாடோடு தவிர்த்து ஆம்புலன்ஸுக்கு வழி அமைத்து ‘க்ரீன் காரிடர் அலர்ட்’ கொடுத்து ஆம்புலன்ஸ் முன்பு விரைந்தது போக்குவரத்துக் காவல் வாகனம்.
வழியெங்கும் போக்குவரத்துக் காவல்துறையினர் எச்சரிக்கைகள் விடுக்க, இரண்டே முக்கால் மணி நேரத்தில் கோவை தனியார் மருத்துவமனையை அடைந்திருக்கிறது திருச்சியிலிருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ். திருச்சியில் காலை 10:00 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12:40 மணிக்கெல்லாம் கோவை தனியார் மருத்துவமனையில் குழந்தையைப் பத்திரமாகக் கொண்டு சேர்த்தார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஸ்வின்.
அங்கு குழந்தையின் வருகைக்காக அனைத்து முன் ஏற்பாடுகளுடன் காத்திருந்த சிறப்பு மருத்துவக் குழுவினர், அந்த 7 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இரதய அறுவை சிகிச்சையை உடனே தொடங்கியிருக்கின்றனர். அவசர காலத்தில் விரைந்து செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு, குழந்தையின் குடும்பத்தினரும், மருத்துவர்களும் நன்றி தெரிவித்துப் பாராட்டியிருக்கின்றனர். சமூக வலைதளத்தில் இது தொடர்பானக் காணொலி வெளியாகி ஆம்புலன்ஸ் அஸ்வினுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Readmore: சந்திரன் பூமிக்கு அருகில் வந்தால் எவ்வளவு பேரழிவை ஏற்படுத்தும்?. அதனால் என்ன நடக்கும்?