குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் மாங்காடு நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாங்காடு மற்றும் கோவூர் பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குக்கள் வாங்க காரணம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பணியை ஆரம்பித்து விட்டோம் என்பதுதான் என்றார். தேர்தல் பணியை திட்டமிட்டு செய்ததால் வெற்றி பெற்றோம் என்றும் தாமோ அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆவதுபோல் உள்ளது, ஆனால் 3 1/2 ஆண்டுகள் சென்று விட்டது என்றும் தெரிவித்தார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யையும் மறைமுகமாக போட்டுத் தாக்கினார். ஒரு படத்திற்கு ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை வாங்குகிறார்கள் என்றும், படம் ரிலீஸ் ஆகும் போது இலவசமாக டிக்கெட் கொடுக்க வேண்டும் ஆனால் ரசிகர்களுக்கு 2 ஆயிரத்திற்கு டிக்கெட் விற்கிறார்கள் என்றும் கூறிய தாமோ அன்பரசன் இவர்களால் நாட்டை பாதுகாத்திட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் விஜய் போன வருஷத்தில் இருந்துதான் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறார், நாம் 15 ஆண்டுகளாக கொடுத்து வருகிறோம் என்றும் கூறினார் தாமோ அன்பரசன். கட்சி ஆரம்பிக்க போவது தெரிந்து தான் ஒரு ஆண்டாக இதனை கொடுத்து வருகிறார் என்றும் அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவிலேயே 75 வயதான கட்சி நமது திமுகதான், இந்தியாவிலேயே திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் தாமோ அன்பரசன் தெரிவித்தார். பாஜகவும் காங்கிரஸும் தேசியக் கட்சி என்றும் கூறிய அமைச்சர் தாமோ வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் என்பதற்கு பதிலாக 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்றார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் 2006 இல்லை 2026 என கூறியதும் சுதாரித்து கொண்ட அமைச்சர் நான் சொல்வதை நீங்கள் எல்லாம் கவனிக்கிறீர்களா என்பதை சோதித்து பார்த்தேன், சரியாக கவனிக்கிறீர்கள் என சிரித்தபடி கூறியதால் அங்கு சிரிப்பலை எழுந்தது.