சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள உள்ளூர் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட எடப்பாடி பெரிய ஏரி நடப்பாண்டில் முதல் முறையாக நிரம்பி மறுக்கால் பாய்ந்து வருகிறது.

மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரியின் மறுக்கரையில் உள்ள செட்டிக்காடு, மொரம்புக்காடு, நண்டுக்காரன்காடு, தேவணக்கவுண்டனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும், மிகுந்த ஆபத்தான முறையில் தண்ணீரை கடந்து அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மறுக்கரையில் உள்ள எடப்பாடி நகருக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரையை கடக்கும் போது தடுமாறி கீழே விழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால், எடப்பாடி பெரிய ஏரிக்கரை பகுதியில் மேலும் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Read More : சேலம் மக்களே உஷார்!. இரவு நேரங்களில் வீட்டுக்குள் புகும் வடமாநில கொள்ளையர்கள்!. மடக்கிபிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்!