அம்பானி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் என்னென்ன கல்வித் தகுதி வைத்துள்ளனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மார்ச் மாதம் முதலே எங்க பார்த்தாலும், யார்கிட்ட பேசினாலும், முகேஷ் அம்பானியின் இளைய மகனின் ப்ரீ வெட்டிங் முதல் திருமணம் பத்திதான் உலகமே ஓஹோன்னு பேசிட்டு இருந்தாங்க. சாப்பாட்டுக்கு இவ்வளவு கோடி, டான்ஸ் ஆடுறதுக்கு இத்தனை கோடி என கோடி ரூபாய்களை தனது மகனுக்காக தண்ணீயாக செலவு செய்துள்ளார் இந்தியாவின் டாப் பணக்காரர் முகேஷ் அம்பானி.

பிரமாண்டமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் பெட்ரோல் பங், ஜியோ தொலைத்தொடர்பு, AJIO உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்து ரிலையன்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக இருப்பவர் இவரின் மனைவி நீதா அம்பானி.

1985ம் ஆண்டு நீதாவை திருமணம் செய்துகொண்டார் முகேஷ் அம்பானி. இவர்களுக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானிக்கு திருமணம் முடிந்துவிட்டது. தற்போது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் தடபுடலாக ப்ரீ வெட்டிங் நடைபெற்றது.

வெறும் ப்ரீ வெட்டிங்குக்கு மட்டுமே 900 கோடி ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் ஜூலை மாதத்தில் நடந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு 1000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படியாக அம்பானி வீட்டு விஷேஷம் உலகையே திரும்பிப்பார்க்கவைத்துள்ளது.

பொதுவாகவே எல்லோருக்கும் ஒரு டவுட் இருக்கும். கோடீஸ்வரர்கள் இவர்களின் கல்வி தகுதி என்னாவா இருக்கும்? எங்க படிச்சுறுப்பாங்க ? என்ன படிச்சுறுப்பாங்க? என்பதை தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அதன்படி அம்பானி வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் என்னென்ன கல்வி தகுதி உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

மும்பை பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்ட படிப்பை முடித்துக்கொண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் MBA படிப்பையும் முடித்தார் முகேஷ் அம்பானி. இவரின் மனைவி நீதா அம்பானி, மும்பையில் உள்ள நர்சி மோஞ்சி வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்துள்ளார். மேலும் இவர் பரதநாட்டியத்தில் கைத்தேர்ந்தவராம்.

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூத்த மகன் தான் ஆகாஷ் அம்பானி. இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்தார். அதன் பின் அமெரிக்காவில் உள்ள ப்ரௌன் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. இவர் அமெரிக்காவில் உள்ள ரோட் தீவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் மகள் தான் இஷா அம்பானி. இவர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை முடித்துள்ளார். அதன் பின் அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க கலிபோர்னியா சென்றார்.இஷா அம்பானியின் கணவர் தான் ஆனந்த் பிரமல். இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதன் பின் இவர் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்துள்ளார்.

முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியின் மனைவி தான் ஸ்லோகா மேத்தா. இவர் வைர வியாபாரியும், தொழிலதிபருமான ரஸ்ஸல் மேத்தா மற்றும் அவரது மனைவி மோனா மேத்தா ஆகியோரின் மகளாவார். ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும் ஒன்றாக படித்தனர் மற்றும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்து, பின் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஸ்லோகா மேத்தா திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் தனது பள்ளிபடிப்பை முடித்தார். நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின் இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸில் சட்டப் பட்டம் பெற்றுள்ளார்.

ஆடம்பரமாக நடந்த முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியை திருமணம் செய்து இளைய மருமகளாக வந்திருப்பவர் தான் ராதிகா மெர்ச்சென்ட். இவர் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா ஆகியோரின் இளைய மகள் ஆவார். ராதிகா மெர்ச்சென்ட் மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி மற்றும் எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் படித்தார். அதன் பின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்துள்ளார். இது தவிர ராதிகா மெர்ச்சென்ட் அவரது மாமியார் நீத்தா அம்பானியை போன்றே நன்கு பரதநாட்டியம் ஆடுவாராம்.

டினா அம்பானி மற்றும் அனில் அம்பானியின் மூத்த மகன் தான் ஜெய் அன்மோல் அம்பானி. இவரை திருமணம் செய்தவர் தான் க்ரிஷா ஷா. இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு கோவிட்-19 சமயத்தில் திருமணம் நடைபெற்றது. க்ரிஷா நிகுஞ்ச் மற்றும் நீலம் ஷா ஆகியோரின் இளைய மகள் ஆவார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இவர் UC பெர்க்லியில் இருந்து அரசியல் பொருளாதாரத்தில் BA பட்டமும், அதைத் தொடர்ந்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சமூகக் கொள்கை மற்றும் மேம்பாட்டில் MSc பட்டமும் பெற்றுள்ளார்.

Readmore: சேலம் பூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!. படகு சவாரி செய்து உற்சாகம்!