குஜராத்தில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் முதலையை அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 ஆறுகள் மற்றும் 137 நீர்த்தேக்கங்களில் வெள்ள அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்து வருகிறது. அஜ்வா அணை நிரம்பியதைத் தொடர்ந்து, அதில் இருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நீர்திறப்பால் ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள வதோரா குடியிருப்பு பகுதிகளில் ஆறுமுதல் 8 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் இந்த அணை 440 முதலைகளுக்கு புகலிடமாக இருந்த நிலையில், உபரிநீர் திறப்பால் முதலைகள் வதோரா நகரின் குடியிருப்பு பகுதிகளில் உலாவி வருகின்றன. மேலும் பாம்புகள், ஆமைகள், என பல உயிரினங்களும் உலாவி வருகின்றன.
வெள்ளநீர் வடியவடிய முதலைகள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போதுவரை 40க்கும் மேற்பட்ட முதலைகள் மீட்பு பணிக்குழுவால் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீட்பு பணிகுழுவினர் முதலை ஒன்றை இருசக்கர வாகனத்தில் வைத்து எலுத்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வதோதராவின் மஞ்சல்பூரில், விலங்குகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர்கள், முதலையை ஒப்படைக்க வனத்துறை அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தின் கோத்ராவிலும் பல முதலைகள் மீட்கப்பட்டன. கோத்ராவின் நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஒரு முதலையும், அதன் குட்டியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த விலங்கு மீட்பாளர்களால் மீட்கப்பட்டது. மேலும் 5 முதலைகள், மாடு ஒன்றை ஆற்றுக்குள் இழுத்துச் செல்லும் ட்ரோன் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.