சென்னை, போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்த 50 வயதான இவருக்கு சொந்தமாக மூன்று தளங்களை கொண்ட வீடு உள்ளது. இந்நிலையில், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் இருக்கும் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். தரைதளத்தில் தனது மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை சாந்தியின் வீடு திறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த முதல் தளத்தில் வசித்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது சாந்தி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீசார் சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பவத்தன்று தனது வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்து தன்னை தாக்கியதாகவும் தன்னை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த 25 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அதில் முதற்கட்ட விசாரணையாக சாந்தி வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். மேலும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் விசாரித்துள்ளனர் அதில் சம்பவத்தன்று சாந்தி கூறும்படியான மர்ம நபர்கள் யாரும் அப்பகுதியில் வரவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் சாந்தியிடம் கிடுக்குபிடி விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் சாந்தியே அந்த நகைகளை அடகு கடைகளில் வைத்து பணத்தை செலவு செய்து விட்டு மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றதாக பொய் புகார் அளித்ததாக கூறியுள்ளார். மேலும், சாந்தி தன்னுடைய மகளின் 20 சவரன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக பைனான்ஸ் மற்றும் வங்கியில் அடமானம் வைத்து அந்த பணத்தில் ஆன்லைனில் ரம்மி விளையாடியதாக தெரிவித்துள்ளார். மேலும், ரம்மியால் ஒட்டு மொத்த பணமும் இழந்த நிலையில் தனது மகளிடம் வாங்கிய நகைகளை கேட்டல் எப்படி கொடுப்பது என்று தெரியாமல் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.