ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப்டம்பர் 5ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை சிலர் வாங்காமல் இருக்கின்றனர்.
எனவே, ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.