புனேவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பெற்றோர் பார்க்கும் மணமகனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த நிலையில், கடைசி நேரத்தில், தான் விரும்பும் நபருடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தார் மீது மணமகன் போலீசில் புகாரளித்தார். அதன் அடிப்படையில், மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2021இல் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் அந்த பெண்ணும், அவரது பெற்றோரும் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதிகள், இளம்பெண் வேறு வழியில்லாமல் பெற்றோர் முடிவு செய்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது காதலனுடனான உறவை பெற்றோரிடம் சொல்லாமல் இருந்ததை குற்றமாக கருத முடியாது.
மௌனமாக இருப்பது நியாயமற்றதாக இருக்கலாம். ஆனால், நேர்மையற்றதாக இருக்காது. மகள் அமைதியாக இருக்கிறார் என்பதால், அவர் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார் என்று பெற்றோர் நினைத்துள்ளனர். ஆனால், கடைசி நேரத்தில் தான் விரும்பும் வாலிபருடன் சென்றது, நேர்மையற்ற செயல் கிடையாது. ஏமாற்றுவதாக இருந்தால், ஏமாற்றும் எண்ணம் ஆரம்பத்தில் இருந்தே இருக்க வேண்டும். ஆனால், பெண் தனது சொந்த விருப்பப்படி ஒருவரை காதலித்ததால் இந்த சூழ்நிலை உருவானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.