தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை நாம் அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டோம். இத்தகைய சூழலில் தான், சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை குறிவைத்து சில மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது, சோசியல் மீடியாவில் பதிவிடப்படும் புகைப்படங்களை பயன்படுத்தி, அதை ஆபாசமாக சித்தரித்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.

இதுதொடர்பாக பல புகார்கள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளது. இதனால், பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படத்தை பதிவிடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தான், தற்போது சென்னை பெருநகர காவல்துறை ஒரு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில், ”ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66 E படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. அதையும் மீறி வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 அட்சம் அபராதம் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

மேலும், தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணையும் (1930) காவல்துறை வெளியிட்டுள்ளது. இதனால் மேற்கூறிய பிரச்சனைகளை யாரேனும் சந்திக்கும்பட்சத்தில், 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Read More : பாலமலை அடிவாரத்தில் உலா வரும் சிறுத்தை..!! சிசிடிவி கேமரா பொருத்தி தீவிர கண்காணிப்பு..!!