சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பாலமலை அடிவாரத்தில் உள்ள கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). இவரது தங்கை உத்தரமணி, செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 26ஆம் தேதி ஆடுகள் உத்தரமணியின் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அன்று இரவு, அப்பகுதியில் உலா வந்த சிறுத்தை, ஒரு ஆட்டை கடித்துக் கொன்றுள்ளது. மேலும் இரண்டு ஆடுகளை கடித்துப் போட்டுவிட்டு சென்றுள்ளது.

பின்னர், அதே நாள் இரவு 7 மணியளவில் கோம்பைக்காட்டில் பைக்கில் சென்ற பழனிசாமி, சிறுத்தை சாலையை கடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, சிறுத்தையை பிடிக்கக் கோரி ஊராட்சி தலைவர் அந்தோணிசாமி தலைமையில் விவசாயிகள் மேட்டூர் சப் – கலெக்டர் பொன்மணியிடம் மனு அளித்தனர்.

அவரது உத்தரவுப்படி, வி.ஏ.ஓ., விஜயகுமார் உள்ளிட்ட வருவாய் ஊழியர்கள் சம்பவ இடத்தை சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், ”ஆடுகளை கடித்தது எந்த விலங்கு என இதுவரை வனத்துறை உறுதி செய்யவில்லை. இதுகுறித்து மேட்டூர் வனச்சரகர் சிவானந்தத்திடம் பேசியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்” என்றார். இருப்பினும் வனத்துறை சார்பில் 4 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.