டெல்லியில் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். பின்னர், மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக மத்திய ஜல்சக்தி துறை, மலைவாழ்மக்கள் நலத்துறை, தொலைதொடர்புத்துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார்.-
அந்த மனுவில், ”தொப்பூர் – பவானி தேசிய நெடுஞ்சாலை மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எருமைப்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என்றும் இந்த சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். மேலும், மேட்டூர் அணையில் இருந்து நாகை வரை காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு சிறப்பு ஆய்வு செய்து 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட நிதி ஒதுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அதேபோல், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலமலைக்கு, மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்றும், மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பாலமலையில் பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும்” என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.