சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பெரிய நாச்சியூர் பகுதியில் நேற்று வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பார்த்து சந்தேகமடைந்த குரும்பப்பட்டி ஊராட்சி தலைவர் மணி, அந்த வாலிபரை அங்கிருந்து செல்லும்படி விரட்டியுள்ளார். தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு அந்த வாலிபர் மீண்டும் அதே பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.
இதனால் திருடனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் மணி மீண்டும் அந்த வாலிபரை விரட்ட முயன்றுள்ளார். அப்போது அந்த வாலிபர் மணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு ஒன்றுகூடிய மக்கள், அந்த வாலிபரை பிடித்து கை, கால்களை கட்டிப்போட்டு தர்ம அடி கொடுத்தனர். பின்னர், கொங்கணாபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இரண்டு மணி நேரம் ஆகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் சமாதானம் பேசி, அந்த வாலிபரை அங்கிருந்து மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வடமாநில வாலிபர் தாக்கியதில் காயமடைந்த ஊராட்சி தலைவர் மணியும், எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘அந்த வாலிபர் ஒடிசாவை சேர்ந்த ராஜாராம் (34). அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று பேசுகிறார். தொடர்ந்து விசாரிக்கிறோம்’ என்று தெரிவித்தனர்.
Read More : நடிகையின் கார் மோதி கூலித்தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!! குடிபோதையில் படுத்திருந்தபோது விபரீதம்..!!