சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். கொடி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, பல விமர்சனங்கள் எழுந்தன. பகுஜன் சமாஜ் கட்சிக் கொடியில் ஏற்கனவே யானை சின்னம் இருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன் தெரிவித்திருந்தார். எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான், பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் சொல்லி மக்களின் நம்பிக்கையும், வாக்குகளையும் பெற்ற அங்கீகாரம் பெற்ற கட்சி பகுஜன் சமாஜ் கட்சி. எங்கள் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம். நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் அடையாளமாகும்.

ஆனால், தமிழ்நாட்டில் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதில், எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விஜய் இருந்து வருகிறார். ஆகையால், அவர் மீது நடவடிக்கை எடுத்து தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More : காதலியை சேர்த்து வைக்கக் கோரி அட்ராசிட்டி..!! கிணற்றுக்குள் வசமாக சிக்கிய காதலன்..!! எடப்பாடியில் பரபரப்பு..!!