கோயம்பேடு மார்க்கெட்டில் வலி தெரியாமல் இருப்பதற்காக வலி நிவாரணி மாத்திரைகளை, மூட்டை தூக்கும் கூலி தொழிலாளிகள் உட்கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய வணிக வளாகம் தான் கோயம்பேடு மார்க்கெட். இங்கு பூச்சந்தை, பழ சந்தை, காய்கறி சந்தை என அனைத்திற்கும் தனித்தனியாய் மொத்தம் ஆயிரக்கணக்கான வியாபார கடைகள் உள்ளன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் காய்கறிகளும், பழங்களும், மலர்களும் வந்த வண்ணம் இருக்கும். இதனால், 24 மணி நேரமும் கோயம்பேடு மார்கெட் பரபரப்பாகவே காணப்படும்.
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு லாரிகளில் வரும் மூட்டைகளை ஏற்றிம் இறக்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் தேனீக்களைப் போல் சுறுசுறுப்பாய் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். சென்னை மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளிகளும் அங்கு இரவு பகலாக ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பணம் சம்பாதிக்க வேண்டுமென்று மனம் சொல்லும். ஆனால், அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும். தூக்கும் மூட்டைகள் 100 கிலோவுக்கு அதிகம் எனும்போது வலி தெரியாமல் இருக்க கூலி தொழிலாளிகள் அதிகம் பயன்படுத்துவது வலி நிவாரணி மாத்திரைகளை தான். பூ மார்க்கெட் பகுதியில் கஞ்சாவையும், சில பெண்கள் போதை மாத்திரைகளையும் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. கடைகளில் மருத்துவரின் பரிந்துரையே இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் விற்கப்படுகின்றன. போதை மாத்திரைகள் மட்டுமல்ல இந்த வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தும்போது, ஒரு ஆள் மூன்று ஆட்கள் செய்யும் வேலைக்கு ஈடாக செயல்பட முடியுமாம்.
அதிகம் சம்பாதிக்க வேண்டும் அதற்கு அதிகம் உழைக்க வேண்டும். இதற்காகத்தான் வலி நிவாரணிகளை பயன்படுத்துவதாக கூலித் தொழிலாளிகள் சிலர் கூறுகின்றனர். ஆனால், இதுபோன்ற வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குடல் புண், சிறுநீர பாதிப்பு, ஹார்ட் அட்டாக், மூளையில் ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் வரலாம் என்று கூறுகின்றனர். எனவே, இந்த விவாகரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, அறியாமையில் இருக்கும் கூலி தொழிலாளிகளின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Read More : கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மேலும் 13 மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்..!! தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!!