உடல் எடையை குறைப்பது பலரின் கனவு. ஆனால், ஒரு மனிதனதால் 500 கிலோ எடையை குறைக்க முடியும் என்று நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? ஆம், நிஜ வாழ்க்கையில் அப்படி நடந்துள்ளது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர், சுமார் 10 ஆண்டுகளுக்குள் 500 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார்.
அதிக உடல் எடை காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டார் காலித் பின் மொஹ்சென் ஷாரி. இவர், 2013இல் 610 கிலோ எடை இருந்தார். இதனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார். அவரது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இதுதொடர்பான தகவல் சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவிற்கு தெரியவந்தது.
அதிக எடை உயிருக்கு ஆபத்தானது என்பதால், அவரது உயிரைக் காப்பாற்ற ஒரு விரிவான திட்டத்துடன் மருத்துவமனைக்கு வந்தார் சவுதி அரேபியா மன்னர். பின்னர், பாதிக்கப்பட்ட நபருக்கு இலவசமாக உயர் மட்ட சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, 30 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு உருவாக்கப்பட்டது. இவர்கள் காலித் ஷாரிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். கேஸ்ட்ரிக் பைபாஸ் சர்ஜரி, உணவு கட்டுப்பாடு, தீவிரமான உடற்பயிற்சி முறைகள் மற்றும் தீவிர பிசியோதெரபி அமர்வுகள் ஆகியவை அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால், அவர் 6 மாதங்களில் கிட்டத்தட்ட பாதி உடல் எடையை இழந்தார். இவை அனைத்தும் 2013ஆம் ஆண்டில் இருந்து படிப்படியாக தொடங்கப்பட்டது. அதிக எடை காரணமாக படுத்த படுக்கையாக இருந்த காலித், 2023இல் தனது உடல் எடையில் 542 கிலோ குறைத்து, தற்போது 63.5 கிலோ எடைக்கு வந்துவிட்டார். சுமார் 10 ஆண்டுகால தொடர் முயற்சியால் இவரது உடல் எடை படிப்படியாக குறைந்துள்ளது. இதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
Read More : விநாயகர் சதுர்த்தி..!! கட்டுப்பாடுகள் விதித்த டிஜிபி..!! எதற்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டும்..?