தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, இன்று (ஆகஸ்ட் 20) முதல் நடைபெறுகிறது. அக்டோபர் 18ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைக்கான முரண்பாடுகளை நீக்குதல், நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இந்த பணியின்போது, வீட்டுக்கு வரும் அலுவலர்களிடம் அளிக்கப்படும் விவரங்கள், உரிய செயலியில் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்படும். இதையடுத்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 29ஆம் தேதி வெளியிடப்படும். அக்.29இல் இருந்து நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் செய்தல், திருத்தங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்கள் அனைத்தும் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Read More : விநாயகர் சதுர்த்தி..!! கட்டுப்பாடுகள் விதித்த டிஜிபி..!! எதற்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டும்..?