திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வசிக்கும் 15 வயது சிறுமி, அங்குள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்று வரும் சிறுமியை, அவரது தாய் தான் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டை விட்டுச் சென்ற சிறுமி, அதன் பின் வீடு திரும்பவே இல்லை.
இதையடுத்து, பயந்துபோன சிறுமியின் தாய், வாணியம்பாடி ஊரக காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தான், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அந்த வீடியோவில், மாயமானதாக கூறப்பட்ட அந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞர் தாலிக் கட்டும் காட்சி இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கோயிலுக்கு சென்று போலீசார் விசாரித்தபோது, 22 வயதான பாலாஜி என்ற இளைஞர், சிறுமியை காதலிப்பதாக கூறி தாலி கட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், இருவரும் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர், அங்கு போலீசார் சென்றபோது சிறுமியை மட்டும் விட்டுவிட்டு, தாலி கட்டிய பாலாஜி தப்பியோடிவிட்டார். இதையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார், அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : 60 ஆண்டுகால கனவு..!! அத்திக்கடவு – அவிநாசி திட்டம்..!! சிறப்பம்சம் என்ன..? கடந்து வந்த பாதை..!!