திருப்பத்தூர் மாவட்டம் கலந்திரா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுபாஷ் என்பவர், ஓராண்டுக்கு முன்பு இரண்டு வருட வாரண்டியுடன் வாணியம்பாடி சிஎல் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் ஷோரூமில் தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பிரிட்ஜ் ஒன்று வாங்கியுள்ளார். இந்நிலையில், அந்த ஃப்ரிட்ஜ் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து அவர் வாங்கிய கடையில் எத்தனை முறை தான் சர்வீஸ் செய்வது என்று வேதனையில் கூறியுள்ளார். தொடர்ந்து 4 முறை சர்வீஸ் செய்ய கொடுத்த நிலையில், மீண்டும் பழுதானதால் கடுப்பாகி பிரிட்ஜை ஆட்டோவில் தூக்கி வைத்துக் கொண்டு வாங்கிய கடைக்கே சென்றுள்ளார்.

இந்த பிரிட்ஜ் எனக்கு வேண்டாம். அதற்கு பதில் வேறொரு பிரிட்ஜை கொடுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு கடை நிர்வாகத்தினர் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் கடுப்பான சுபாஷ் பழுதான பிரிட்ஜை பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்றுள்ளார். இதையடுத்து, பதறிப்போன ஊழியர்கள் பிரிட்ஜை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

ஃப்ரிட்ஜில் என்ன கோளாறு என்ற கண்டறிந்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கடை நிர்வாகம் உறுதியளித்த பின், சுபாஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். தொடர்ந்து இதேபோல் பிரிட்ஜ் கோளாறு ஆவதாகவும், பழுதால் மின்சாரம் கசிந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அன்றாடம் வரும் செய்திகளால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.