குரங்கு அம்மை நோய் தொற்று குறித்து சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு மருத்துவத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று உலக மக்களை புரட்டிப் போட்ட நிலையில், தற்போது அதன் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது குரங்கு அம்மை என்ற நோய் பாதிப்பு மக்களை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்த தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது இப்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதையடுத்து, உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலையை பிறப்பித்திருக்கிறது.

இந்நிலையில் தான், குரங்கு அம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை யாருக்கும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இல்லை என்றும் தோல் அரிப்பு, 2-4 வாரம் தொடர் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, சோர்வு, நிணநீர் கணுக்கள் வீக்கம் போன்றவை குரங்கு அம்மையின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. குரங்கு அம்மை நோய் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடம் இருந்தும் பரவக் கூடியது என தெரிவித்துள்ளது.