சேலம் மாவட்டம் எடப்பாடி – கல்வடங்கம் செல்லும் பிரதான சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது தண்ணீர் தாசனூர் பகுதியில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியின்போது, சாலை அமைக்க இடையூறாக இருந்ததாக கூறி அருகே இருந்த 4 பனைமரத்தை எந்தவித அனுமதியுமின்றி அகற்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மேலும், சாலை அமைப்பதற்கும் அந்த பனைமரத்திற்கும் சம்பந்தமே இல்லாத நிலையில், அதை அகற்றியுள்ளதாக கூறுகின்றனர். இதற்கிடையே, தற்போது இருக்கும் தார்சாலையில் இருந்து இரு புறமும் ஒரு மீட்டர் அகலப்படுத்துவதற்கு பதிலாக ஏற்கனவே இருக்கும் சாலையை பறித்து தார்சாலை அமைத்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.