செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுசாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வேன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், வேனில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் சாலையில் சிதறின. தகவலறிந்து வந்த தாம்பரம் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், பொதுமக்களின் உதவியோடு சாலையில் சிதறி கிடந்த சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். மேலும், விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.