அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டணப் படுக்கை அறை சிகிச்சை வசதியைத் தொடங்கி வைத்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டணப் படுக்கை அறைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் இந்த வசதி ஏற்படுத்த முடிவு செய்து கோவை, மதுரை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை, ரப்பர் உற்பத்தி கழிவுகளால், புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. இந்த மாவட்டங்களில் 4.19 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 50 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தாண்டு, அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.