இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபாவின் கஸ்மன் லோபஸ் யுஸ்னெலிஸை 5-0 என முற்றிலுமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். 50 கிலோ எடைப்பிரிவில் விளையாட வேண்டிய வினேஷ் போகத், செவ்வாய்க்கிழமை இரவு 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. விளையாட வேண்டிய நாட்களில், அவர் 50 கிலோவுக்கு கூடுதல் எடையுடன் இருக்கக் கூடாது என்பது விதிமுறை.
எனவே, செவ்வாய்க்கிழமை இரவு முதல் வினேஷ் போகத், தொடர் ஓட்டம், ஸ்கிப்பிங், சைக்கிளிங் என கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். மேலும், இரவு உணவை தவிர்த்துவிட்டு, எடை குறைப்புக்காக முடியை வெட்டிக் கொண்டதுடன், உடலில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவு ரத்தத்தையும் வெளியேற்றியுள்ளார். தொடர் பயிற்சியால் ஒரே இரவில் 1.85 கிலோ எடையைக் குறைத்த அவரால் 100 கிராமை குறைக்க முடியாமல் போயிருக்கிறது.
அவரால் குறைக்க முடியாமல் போன அந்த 100 கிராம் உடல் எடையானது, அவரை இன்று ஒலிம்பிக் பதக்கம் எனும் கனவை நனவாக்க விடாமல் தடுத்து, தகுதி நீக்கம் செய்யக் காரணமாக அமைந்துவிட்டது. இந்திய ஒலிம்பிக் குழு சார்பில், வினேஷ் போகத் தனது உடல் எடையைக் குறைக்க கூடுதல் நேரம் கேட்டும், அது பாரீஸ் ஒலிம்பிக் அமைப்பினால் மறுக்கப்பட்டுள்ளது.
Read More : ”கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது”..!! தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு..!!