சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை மர்ம நபர் காவல்நிலைய வளாகத்தில், பெட்ரோல் குண்டு வீசினார். இச்சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது குறித்து தகவலறிந்த எஸ்பி அருண் கபிலன், சங்ககிரி டிஎஸ்பி ராஜா உள்ளிட்டோர் எடப்பாடி காவல் நிலையத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், 3 தனிப்படை அமைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில், காவல் நிலையத்துக்குள் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு போன்ற பொருளை வீசியது தெரியவந்தது. இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசிய எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட கட்டபிரபு மகன் ஆதி (எ) ஆதித்யாவை (20) எடப்பாடி போலீசார் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாகவும், சிறைக்கு சென்று வந்தால், மக்கள் தன்னை கண்டு அஞ்சுவார்கள் என்பதற்காகவும், பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் கூறுகையில், ”எடப்பாடி காவல் நிலையத்தில் மர்ம நபர் 2 பாட்டிலில் தீ வைத்து தூக்கி வீசினார். இதில் காவல் நிலையத்தில் இருந்த எந்த பொருளும் சேதம் அடையவில்லை. யாருக்கும் பாதிப்பு இல்லை. டிஎஸ்பி மேற்பார்வையில், எடப்பாடி காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து, சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்து 10 மணி நேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்துள்ளோம்.

சமூக வலைதளங்களைப் பார்த்து, பிரபலமாக வேண்டும் என்று இதுபோன்ற செயலில் ஆதித்யா ஈடுபட்டுள்ளார். அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வழக்குகள் உள்ளன. ஆனால், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்யவில்லை” என்று அவர் கூறினார்.

Read More : ”இப்பவும் ஒன்னும் கெட்டு போகல”..!! தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரித்தால் ரூ.45,000 கோடி பெற்றுத் தருவோம்..!!