துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Ration | இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் 2024 மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜூலை 2024 மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ஜுலை மாதத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருள்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால், குடும்ப அட்டைதாரர்களால் ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை முழுமையாக பெற முடியவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையை கருத்தில் கொண்டு ஜூலை 2024 மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.