Dog | கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிராமம் யமகர்னி. இங்கு வசித்து வருபவர் கமலேஷ் கும்பர். இவர் மகாராஜ் என்ற நாயை வளர்த்து வருகிறார். நாய் மீது மிகுந்த பாசமும் பரிவும் காட்டி வந்த கமலேஷ் குடும்பத்திற்கு, அந்த நாயும் மிகுந்த விசுவாசம் காட்டி வந்துள்ளது. கடந்த ஜூன் 26ஆம் தேதி கமலேஷ் தனது குடும்பத்துடன் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகே உள்ள பந்தபூர் கிராமத்திற்கு புனிதப்பயணம் மேற்கொண்டார். இது, அவர் வசிக்கும் ஊரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது. யாத்திரையின்போது, அவருடைய நாயையும் அழைத்துச் சென்றுள்ளார் கமலேஷ்.
அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அலைமோதும் கூட்டத்தில் தனது செல்ல நாயான மகாராஜாவை, கமலேஷ் தொலைத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்த கமலேஷ் குடும்பத்தினர், பல இடங்களில் நாயைத் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், சோகத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பினர். மிகுந்த வருத்தத்தில் இருந்த அவர்களுக்கு, ஓரிரு நாள்களில் பெரும் ஆச்சர்யமும் காத்திருந்தது. ஆம்.. திருவிழா கூட்டத்தில் தொலைந்து போன செல்லப்பிராணி மகாராஜா, அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்று வாலாட்டிக் கொண்டிருந்தது. இதை அவர்களால் நம்பவே முடியவில்லை. தொலைந்து போன நாய் மீண்டும் வீடு திரும்பிய சந்தோஷத்தில் கமலேஷ் குடும்பத்தினர் திக்குமுக்காடிப் போயினர்.
சுமார் 250 கிமீ கடந்து தங்களைத் தேடி வந்த நாயின் பாசத்தால் நெகிழ்ந்து போன கமலேஷ் குடும்பத்தினர், அதற்கு மாலையிட்டு அலங்கரித்து உணவளித்தனர். கிராம மக்களும் நாயின் செயலை வியந்து பாராட்டினர். நாயின் நன்றி உணர்வை நெகிழ்வோடு சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்தனர். இதுகுறித்து கமலேஷ் கூறுகையில், “திருவிழாவில் எங்கள் செல்ல நாய் தொலைந்து போனதும் மிகவும் கவலை அடைந்தோம். அதனை தேடி பல இடங்களில் அலைந்தோம். எங்கு தேடியும் கிடைக்காததால், சொந்த ஊருக்குத் திரும்பினோம்.
ஆனால், அடுத்த சில நாட்களில் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. மகாராஜ் (நாய்) என் வீட்டு வாசல் முன் வந்து நின்று எதுவுமே நடக்காதது போல் வாலாட்டிக் கொண்டிருந்தது. அதற்கு நன்றாக உணவளித்தோம். அது நன்றாக உள்ளது. 250 கி.மீ. தொலைவில் இருந்த போதும் நாய்க்கு வழிகாட்டியது கடவுள் பாண்டுரங்கன் தான் என்று நினைக்கிறோம்” என்றார் நெகிழ்ச்சியோடு.