தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய மேட்டூர் அணை, தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர் அனைத்தும் காவிரியாற்றில் திறந்துவிடப்படுகிறது. இதற்கிடையே, கரையோர பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால், பல குடும்பத்தினா் கரையோர வீடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி சென்றுவிட்டனர். இருப்பினும், ஒருசிலர் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தனர். இப்போது அணையில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீா்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.
இதையடுத்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டதால், பவானியில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உடைமைகளுடன் நேற்றிரவு பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறினர். பீரோ, கட்டில், டிவி மற்றும் உடைமைகளை நண்பா்கள் மற்றும் உறவினா்கள் உதவியுடன் பாதுகாப்பான பகுதிக்கு எடுத்துச் சென்றனர். கரையோர பகுதிகளை சோ்ந்த மக்கள் பவானி நகராட்சி, பசுவேஸ்வரா் தெரு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதேபோல, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளிலும் கரையோர மக்கள் உடைமைகளுடன் வெளியேற்றப்பட்டு, மேடான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.