65 ஆண்டுகளாக இயங்கி வரும் நூலகம், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நூலகத்தை சீரமைத்துத் தர வேண்டும் என வாசிப்பாளர்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில், கடந்த 1959-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பொதுநூலகத்துறை சார்பில் கிளை நூலகம் ஒன்று திறக்கப்பட்டது. இந்த கட்டிடம் திறக்கப்பட்டு தற்போது 65 ஆண்டுகள் முடிகிறது. ஆனால், இதுவரை இந்த நூலகத்தில் பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால், அந்த நூலகம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

இதனையடுத்து, அந்த நூலகம் அருகில் உள்ள பனைவெல்ல கூட்டுறவு சங்க கட்டிடத்தில் தற்காலிகமாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஆனால், இந்த கட்டிடமும் எந்த நேரத்திலும் மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
மழைக்காலங்களில் கட்டிடத்திற்குள் நீர் கசிவதால், புத்தகங்கள் மழைநீரில் நனைந்து வீணாகிறது. வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் அரசு, நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அங்கு வரும் வாசிப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த கட்டிடங்கள் ஆங்காங்கே தொங்கியவாரும், கம்பிகள் நீட்டியவாரும் கட்டிடத்தை சுற்றிலும் முட்புதார்களாகவும் இருக்கிறது. இங்கு சுமார் 5000-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும், 100-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து படித்து செல்கின்றனர். இந்நூலகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இங்கு வந்து படிக்கும் மாணவர்களிடம் கேட்டபோது, இங்கு நூலகம் இருப்பது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற அச்சத்திலேயே வந்து செல்வதாக தெரிவித்தனர்.

மேலும், தற்போதைய அரசு பல்வேறு பகுதிகளில் நூலகம் அமைக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த பகுதியில் இடிந்து கிடக்கும் நூலகத்தை சீரமைத்து தரக்கோரி பல முறை மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையிலும் எந்த ஒரு பயனும் இல்லை அதுமட்டுமின்றி ஐந்து வருவாய் கோட்டாட்சியர், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தியிலும் ஆறு முறை விவசாய குறைந்திருக்கும் கூட்டத்திலும் மனு கொடுத்தும் எந்த ஒரு பயனும் இல்லை, அரசு மதுவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் படிப்பிற்கு ஏன் கொடுப்பதில்லை நூலகத்தின் மூலமாக இதுவரை பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உருவாகியுள்ளனர். அப்படிப்பட்ட நூலகம் இன்று இடிந்து விழும் தருவாயில் உள்ளது. அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிக்கிறது. எனவே, இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த நூலகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.