சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், சங்ககிரியை அடுத்த கல்வடங்கம், காவேரிப்பட்டி உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

Mettur Dam | கர்நாடகாவில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனால், அதிக உபரிநீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளது. இதற்கிடையே, நேற்றைய தினம் (ஜூலை 28) மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. மேலும், நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தொடங்கும் காவிரியின் கரையோர பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவேரிபட்டி, கோனேரிப்பட்டி, அக்ரஹாரம், கல்வடங்கம், புள்ளாக்கவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளிலும் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதை தொடர்ந்து, காவிரி ஆற்றங்கரையோரங்களில் நின்று செல்ஃபி எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம். கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கி குளிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More : Idp7News செய்தி எதிரொலி..!! மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்..!!