291 கி.மீ தூரத்தை 12 மணிநேரம் மெதுவாகக் கடக்கும் உலகின் மிக மெதுவான ரயில் கிளேசியர் எக்ஸ்பிரஸ், அதன் பிரமிப்பூட்டும் அழகால் பயணிகளை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.
இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், உலகின் மிக மெதுவான ரயில் இந்தியாவில் இல்லை. இந்த ரயில் சுவிட்சர்லாந்தில் உள்ளது. அதுதான் கிளேசியர் எக்ஸ்பிரஸ் (Glacier Express). இந்த ரயில் உலகின் மிக மெதுவான எக்ஸ்பிரஸ் ரயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில் 291 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் 12 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இது மணிக்கு சுமார் 24 மைல் வேகத்தில் மட்டுமே செல்கிறது. இவ்வளவு மெதுவாகச் செல்வதால், பயணிகளுக்கு வழியில் உள்ள அழகான காட்சிகளை ரசிக்க போதுமான நேரம் கிடைக்கிறது.
இந்நிலையில், கிளேசியர் எக்ஸ்பிரஸ் ரயில் அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் வழியாகச் செல்கிறது. ரோன் பனிப்பாறை, உயரமான மற்றும் ஆபத்தான ஓபரால்ப் பாஸ், வளைந்து செல்லும் லேண்ட்வாசர் வயடக்ட் மற்றும் “சுவிட்சர்லாந்தின் கிராண்ட் கேன்யன்” என்று அழைக்கப்படும் ரைன் ஜார்ஜ் போன்ற உலகின் மிக அழகான நிலப்பரப்புகள் வழியாக இது பயணிக்கிறது. பனி மூடிய மலைகளும், அமைதியான கிராமங்களும் வழியில் காணக் கிடைக்கின்றன. இந்த பயணம் ஒரு சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும்.
இதைதொடர்ந்து, கிளேசியர் எக்ஸ்பிரஸ் ரயில் கரடுமுரடான மலைப்பகுதிகள் வழியாகச் செல்கிறது. இந்தப் பயணத்தின்போது, மொத்தம் 291 பாலங்களையும் 91 சுரங்கப்பாதைகளையும் கடந்து செல்கிறது. இந்த சிலிர்ப்பூட்டும் ரயில் பயணம் நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் செர்மாட்டில் இருந்து செயிண்ட் மோரிட்ஸ் வரை இந்த ரயில் ஓடுகிறது. கடல் மட்டத்திலிருந்து 2,033 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓபரால்ப் பாஸ் இந்தப் பாதையில் உள்ள மிக உயரமான பகுதியாகும். இந்த கிளேசியர் எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாகச் சென்றாலும், அது வழங்கும் இயற்கை காட்சிகள் மற்றும் அனுபவத்திற்காக எப்போதும் அதிக தேவை உள்ள ஒரு ரயிலாக இருக்கிறது.