இரண்டு ஆண்டுகளில் இந்தியச் சாலைகள் அமெரிக்கச் சாலைகளைப் போல மேம்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியச் சாலை வசதிகள் அமெரிக்கச் சாலைகளைப் போலவே இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், திங்கட்கிழமை அன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த நிதின் கட்கரி, கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான செலவினங்களை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியச் சாலைக் கட்டமைப்பு ஏற்கனவே மாறிவிட்டது. இப்போது நீங்கள் பார்ப்பது வெறும் ட்ரெய்லர்தான். முழுப் படம் இன்னும் தொடங்கவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியச் சாலைக் கட்டமைப்பு அமெரிக்காவைப் போலவே இருக்கும். இதை நீங்கள் பார்ப்பீர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் என்னிடம் பேசும்போது, இந்தியச் சாலை வசதிகள் அமெரிக்காவை விட சிறப்பாக இருப்பதாகச் சொன்னார்கள். மேலும், மத்திய அரசு அமைத்துள்ள நல்ல சாலைகளால் இந்தியாவில் பொருட்களின் போக்குவரத்துச் செலவு குறைந்துள்ளது. இது நமது ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதி அதிகரித்தால், விவசாயம், உற்பத்தி, சேவைத் துறைகள் உட்பட அனைத்துத் துறைகளும் மேம்படும். இதையடுத்து. இந்தியாவில் பொருட்களின் போக்குவரத்துச் செலவு முன்பு 16% ஆக இருந்தது. சீனாவில் இது 8% ஆகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12% ஆகவும் உள்ளது. மேம்படுத்தப்பட்ட சாலைகள் மூலம், பாஜக அரசு இந்தச் செலவை 9% ஆகக் குறைத்துள்ளது.
இந்தியாவில் தற்போது நடந்து வரும் சாலைத் திட்டங்கள்:
- 25 புதிய பசுமை வழி விரைவுச் சாலைகள்.
- 3,000 கி.மீ துறைமுகங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள்.
- புனித யாத்திரை மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் (ரூ.1 லட்சம் கோடி மதிப்பில்).
- புத்த மத சுற்றுலாத் தலங்களையும், சார் தாம் கோவில்களையும் இணைக்கும் சாலைகள்.
குகைப் பாதைகள் மற்றும் தளவாடப் பூங்காக்கள்:
- ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இடையே 36 குகைப் பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் 23 முடிந்துவிட்டன, 5 குகைப் பாதைகளுக்கான வேலைகள் நடந்து வருகின்றன.
- 35 பல அடுக்கு தளவாடப் பூங்காக்களும் (Multi-modal Logistics Parks) உருவாக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்தியாவின் சாலை வளர்ச்சி பொது உள்கட்டமைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இது வர்த்தகத்தையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியா, கடந்த பத்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பைக் கொண்டுள்ளது. இதன் தேசிய நெடுஞ்சாலைகள் மொத்தம் சுமார் 1,46,000 கி.மீ நீளம் கொண்டவை. நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பிப்ரவரி 2025 அறிக்கையின்படி, இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் (NH) 2004 இல் 65,569 கி.மீ. ஆக இருந்தது. 2014-இல் அது 91,287 கி.மீ. ஆகவும், 2024 இல் 1,46,145 கி.மீ. ஆகவும் விரிவடைந்துள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.