பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நண்பர்களோடு குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் தர்ஷன் (18), கோவை ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு சிவில் படித்து வருகிறார். இவரும், இவரது கல்லூரி நண்பர்களான பூலாம்பட்டி, குப்பனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த முகேஷ் (19 ), இளம்பிள்ளை கிஷோர் (21) திருப்பத்தூர் அமித் ஆன்ரோ (21) ஆகிய 4 பேரும் பூலாம்பட்டி மோலப்பாறை பேரேஜ் அருகில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது, தர்ஷன் எதிர்பாராத விதமாக காவிரி ஆற்று நீரில் மூழ்கியுள்ளான். இதையடுத்து, அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால், உடனே எடப்பாடி தீயணைப்புத் துறை மற்றும் பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தர்ஷனை சடலமாக மீட்டனர். பின்னர், பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்ஷனின் உடலை மீட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.