சேலத்தில் உள்ள ஏஎம் பிரியாணி கடையில் அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் நான்கு ரோடு சந்திப்பு அருகே ஆதம்பாஷா என்பவருக்குச் சொந்தமான பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் இன்று (ஏப்ரல் 15) அதிகாலை சுமார் 3 மணியளவில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதைப்பார்த்தவர்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதற்கிடையே, பிரியாணி கடையில் பிடித்த தீ, மளமளவென பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென கடையில் இருந்த 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியது. இதனால், அங்கு மேலும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும், கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது.

இதனைத் தொடர்ந்து, பள்ளப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு, சேலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.