ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றியிருப்பது போலியான வெற்றி என்றும், இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 5ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதேபோல் டெல்லி சட்டசபைக்கும் அன்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. காலை முதலே வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. டெல்லி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, களத்தில் யாரும் போட்டியிடாத நிலையில் திமுக பெற்றது போலி வெற்றியாகும் என்று கூறினார். நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என கேட்கிறீா்கள்? தோ்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் உள்ளன. 2026ம் ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் பலமான கூட்டணி அமையும். தோ்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி குறித்து சொல்ல முடியும்.
இன்னும் 6 மாதங்களில் கூட்டணி வடிவம் பெறும். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தோ்தல் நேரத்தில் அமைக்கப்படுவதுதான். டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி, இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி விழுந்துள்ளது என்றே கூறலாம். டெல்லி மக்கள் பாஜகவை விரும்புகின்றனா். அதனால் அக்கட்சி வென்றது என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
வேலூரில் ரயிலில் பயணித்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரது வயிற்றியில் இருந்த சிசு உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அதிகாித்து வருகிறது. எனவே தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.