போலி ஆவணங்கள் தயாரித்து பயனர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து பலே மோசடியில் ஈடுபட்டு வந்த வங்கி அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ பாண்டியன். திருச்செங்கோட்டில் நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் எக்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் இவர். தனது தொழிலை மேம்படுத்துவதற்காக சிட்டி யூனியன் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேசவ பாண்டியணின் வங்கி காசோலையை அவருக்கு தெரியாமல் பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி அதிகாரிகள் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கேசவ பாண்டியன் தனது நண்பர்களிடம் விசாரித்த போது சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனருக்கு தெரிந்து இதுபோல பல நபர்களின் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் வங்கியில் இருந்த தனது பணத்தை வங்கி அதிகாரிகளே கையாடல் செய்ததாக கேசவ பாண்டியன் புகார் அளித்தார். இதையடுத்து, சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி, வங்கியின் பொது மேலாளர் மோகன் ,கிளை மேலாளர் குஞ்சிதபாதம் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து வங்கி கடனில் வாங்கிய இயந்திரங்களை வங்கி நிர்வாகத்திற்கு தெரியாமல் திருடி சென்று விட்டதாக சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் கேசவ பாண்டியன் மீது புகார் ஒன்றை திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் கேசவ பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்தனர் . இதையடுத்து கேசவ பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தாரின் கையெழுத்துகளை போலியான முறையில் போட்டு ஆவணங்களை தயாரித்து கடன் வாங்கி மோசடி செய்தததாக வங்கி அதிகாரிகள் மீது நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையே கொரோனா காலகட்டத்தில் கேசவ பாண்டியன் வாங்கிய கடனுக்கு பணத்தை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குறைந்த விலைக்கு ஏலம் விட்டு 25 கோடி ரூபாய் வரை கேசவ பாண்டியனுக்கு இழப்பு ஏற்படுத்தினர் என கூறப்படுகிறது. இந்த வழக்கு கோவை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து கேசவ பாண்டியன், அவரது தந்தை ,தாய், சகோதரர் உள்ளிட்டோரின் கையெழுத்துக்களை போலியாக போட்டு போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் கேசவ பாண்டியன் புகார் அளித்தார் . புகாரின் பேரில் போலீசார் சிட்டி யூனியன் வங்கியின் திருச்செங்கோடு கிளை மேலாளர் அரவிந்த், கும்பகோணத்தில் உள்ள வங்கியின் மேனேஜர் குஞ்சிதபாதம், கும்பகோணம் கிளையின் சீனியர் மேனேஜர் கணேசன், இன்ஸ்பெக்ஷன் பிரிவு சீனியர் மேனேஜர் மகாராஜா, மண்டல மேலாளர் சுயம்புலிங்க ராஜா மற்றும் திருச்செங்கோடு கிளை மேலாளர் ராமன் ஆகிய ஆறு பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் வழக்கிற்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர். கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். கேசவ பாண்டியன் சார்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மதுரம் லா அசோசியேட்ஸ் எஸ்.பாஸ்கர் மதுரம் ஆஜராகி வாதிட்டார். இந்நிலையில் கடந்த வாரம் சிட்டி யூனியன் வங்கி வழக்கை போலீசார் விசாரிக்க விதிக்க பட்டிருந்த தடையை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை மூன்று மாதத்திற்குள் உரிய முறையில் நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை மீண்டும் துவக்கியுள்ளனர்.
Readmore: எகிறியடிக்கும் தங்கம் விலை!. இனிமேல் குறையவே வாய்ப்பில்லையாம்!. வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்!