கள்ளக்காதல் விவகாரத்தில் 3 முறை வீட்டை மாற்றி வேறு பகுதிக்கு சென்ற நிலையிலும் விடாமல் தொல்லை கொடுத்து வந்தவரை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் மனைவி மற்றும் மகன்களுடன் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள வடுகன்காளிபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில், மனைவிக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி என்பவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை கண்டித்ததால் தம்பதிகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. முனியாண்டிக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், முருகவேலின் மனைவியை அழைத்து சென்றி தனிகுடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, தனது மனைவியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முருகவேல் மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார். இதையடுத்து தாராபுரத்தில் தங்கியிருந்த அந்த பெண்ணை சந்திக்க மீண்டும் முனியாண்டி அங்கு வந்துள்ளார். இதையடுத்து திரும்பவும் அந்த பெண்ணை முனியாண்டி அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து, மீண்டும் முருகவேல் மனைவியை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து திருப்பூரில் தங்கியிருந்துள்ளார்.

அங்கும் முனியாண்டி தேடி வரவே, மனைவி, மகனுடன் முருகவேல் கருமத்தம்பட்டி அருகே உள்ள தோட்டத்து வீட்டிற்கு இடம் மாறி வந்துள்ளார். இந்நிலையில் முனியாண்டி நேற்று மாலை 4.45 மணி அளவில் அந்த பெண் இருப்பிடம் அறிந்து வடுகன்பாளையத்திற்கே வந்து விட்டார். வாணியை காணும் ஆவலுடன் வீட்டிற்குள் சென்ற போது முருகவேல் என் குடும்பத்தை நிம்மதியாக இருக்க விட மாட்டாயா? எனக் கேட்டபடி அவரது நெஞ்சில் கத்தியால் குத்தி உள்ளார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முனியாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு முனியாண்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகவேலை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.