தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் போராட்டத்தில் தாய் உள்பட 2 குழந்தைகளும் பாலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி காலனியை சேர்ந்தவர் இந்துமதி. இவருக்கு நிதின் ஆதித்யா என்ற 11 மாத ஆண் குழந்தையும், யாத்விக் என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டிக்கு நீர் நிரப்பிக்கொண்டிருந்துள்ளார் இந்துமதி. தண்ணீர் நிரம்புவதை தெரிந்துகொள்ள தொட்டியை இந்துமதி திறந்துவைத்துவிட்டு அருகில் மற்ற வேலைகளை கவனித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த தம்பி நிதின், தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளான். இதனை பார்த்த அண்ணன் யாத்விக், தம்பியை காப்பாற்றுவதற்காக கை கொடுத்தபோது, அவனும் தவறி விழுந்துள்ளான்.
இதையடுத்து, இரு குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த இந்துமதி, தொட்டிக்குள் இரு குழந்தைகளும் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரும் தொட்டிக்குள் குதித்துள்ளார். இருப்பினும், தண்ணீர் தொட்டி நீர் நிரம்பியதால் 3 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.